கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை: பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பழனி பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-10-13 22:30 GMT
பழனி,

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை ஆகியவை உள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் அணைகளுக்கு ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைப் பகுதிகளில் நீர்வரத்து இன்றி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாய தேவைக்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பழனி பகுதியில் கடும் வெயில் நிலவி வந்தது. எனினும் கடந்த 2 நாட்களாக பழனி சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 59.52 அடியாக உள்ளது. அணைக்கு 27 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது 44.69 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 14 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 36.02 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு 180 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்