திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்கள் மீனவர்கள் வேதனை

திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்களில் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2019-10-14 22:45 GMT
சீர்காழி,

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக பகுதியில் இருந்து திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் ஆகியன மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வலையில் சிறிய வகை மீன்கள் சிக்குகின்றன.

இதனால் மீனவர்கள், தங்களது வலையில் சிக்கும் சிறிய வகையான கனவாய் மீன்கள், வாலை மீன்களை பிடித்து கொண்டு ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர். இந்த வகை மீன்களை தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த வகை மீன்களில் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

போதுமான வருமானம்

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கடலில் சிறிய வகை மீன்களே சிக்குகின்றன. இந்த வகை மீன்களில் போதிய வருமானம் கிடைக்காது. படகுகளுக்கு ஊற்றப்படும் டீசலுக்கு ஆகும் செலவுகளை சரிசெய்யும் அளவுக்கு கூட பெரியவகை மீன்கள் சிக்குவதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் இயற்கை சீற்றத்தால் மேலும் மீன்பிடி தொழில் பாதிக்கும் அபாய நிலை உள்ளது. நாங்கள் மீன்பிடி தொழிலேயே நம்பி இருப்பதால் போதுமான வருமானம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்