கோத்தகிரியில் கனமழை: 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின

கோத்தகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

Update: 2019-10-14 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன், எரிசிபெட்டா, இந்திரா நகர், காவிலோரை, வ.உ.சி நகர், குருக்குத்தி, ஓடந்துறை வழியாக நீரோடை செல்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நீரோடை தூர்வாரப்பட்டது. அப்போது நீரோடையின் அகலம் அதிகரிக்கப்பட்டதே தவிர, ஆழப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீரோடையை மீண்டும் தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது நீரோடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. எனவே நீரோடை சுருங்கி விட்டது. இதனால் கனமழை பெய்யும்போது நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதனருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடுங்குளிரில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையில் கனமழை காரணமாக மேற்கண்ட நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து காவிலோரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அதில் பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலத்தில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால், பெரும் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே அந்த நீரோடையை மீண்டும் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும். இல்லையென்றாலும் நாங்களே சொந்த செலவில் அதை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் ந‌‌ஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்