பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாயமான பிளஸ்-2 மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாயமான பிளஸ்-2 மாணவர், சவுக்கு தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-14 23:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை மாவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், கார் டிரைவர். இவருடைய மகன் சபீன் (வயது 17). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

ஆயுத பூஜை விடுமுறைக்கு பின்னர், சபீன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் சபீனை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த 10-ந் தேதி சபீன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால் இதுபற்றி அய்யப்பன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் சபீனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முட்டம் கடற்கரை பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது, துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, ஒரு ஆண் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக தொங்கியது மாயமான மாணவர் சபீன் என்பதும், பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்