ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை: 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

ஓட்டப்பிடாரம் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2019-10-15 04:30 IST
தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அன்னலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விமல்ராஜ் (வயது35). கூலித் தொழிலாளி. இவருக்கு சுடலைக்கனி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் வேலை செய்து வந்ததால் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் இறந்து விட்டார். இதனால் குறுக்குச்சாலையில் விமல்ராஜின் தாய் வீரலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் விமல்ராஜை படுகாயங்களுடன், குறுக்குச்சாலையில் அவரது தாய் வீட்டில் மர்மநபர்கள் விட்டுச் சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் விமல்ராஜ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விமல்ராஜூக்கும், மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாகலிங்கம் (48) என்பவருக்கும் அந்த பகுதியில் அவ்வபோது ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நாகலிங்கம் மற்றும் சிலர் விமல்ராஜின் நண்பரான இசக்கிமுத்துவை அடித்துள்ளனர். இதற்கு பழிவாங்க வேண்டும் என்பதற்காக விமல்ராஜ் மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் நாகலிங்கத்தின் ஆட்டோவை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே தனியாக வந்த விமல்ராஜை, நாகலிங்கம் தரப்பினர் ஆட்டோவில் கடத்தி சென்று அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை குறுக்குச்சாலையில் உள்ள வீட்டில் இறக்கி விட்டு சென்றனர். இறக்கி விட்ட சிறிது நேரத்தில் விமல்ராஜ் இறந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் நாகலிங்கம், அவரின் மகன் மணிகண்டன் (20), ராஜகோபால்நகரை சேர்ந்த அர்ச்சுனன், மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன் (21) உள்ளிட்ட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கு விரைவில் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்