பெரியகுளம் அருகே, சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2019-10-15 22:15 GMT
பெரியகுளம், 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 126.28 அடியாகும். கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.இதனையடுத்து அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காகவும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார். மேலும் அணையில் இருந்து மதகு வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் கலெக்டர் மலர் களை தூவினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகரசபை முன்னாள் தலைவர் ஓ.ராஜா, திட்ட இயக்குனர் திலகவதி, மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் மயில்வாகனன் மற்றும் தென்கரை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜனவரி 15-ந்தேதி வரை வினாடிக்கு 27 கனஅடி தண்ணீரும், ஜனவரி 16-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரை 25 கனஅடி தண்ணீரும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்