போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல்

போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மண்டைஓடு ‘சூப்பர் இம்போஸ்’ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.;

Update:2019-10-22 03:45 IST
போடி,

போடியில் இருந்து கேரளா செல்லும் போடிமெட்டு மலைப்பாதையில் 8-வது வளைவில் காத்தாடிபாறை என்ற இடத்தில் 100 அடி பள்ளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அழுகிய நிலையில் அரை நிர்வாணத்தோடு ஒரு பெண்பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. போடி குரங்கணி போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக இங்கு வந்தார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளாரா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கைரேகை பதிவு கிடைக்கவில்லை. மேலும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மர்மநபர்கள் கற்களால் அந்த பெண்ணின் முகத்தை சிதைத்துள்ளனர்.

எனவே அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது மண்டை ஓட்டை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதையொட்டி அவரது மண்டை ஓடு ‘சூப்பர் இம்போஸ்’ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், உடல் முழுமையாக அழுகியுள்ளதால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே ‘சூப்பர் இம்போஸ்’ சோதனைக்கு மண்டை ஓடு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகே அவரது அடையாளம் குறித்து தெரியவரும். இவர் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?, அல்லது கடத்தி வந்து கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்