குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-22 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் 33–வது வார்டு சித்தலூர் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தபோது குடிநீர் குழாய் உடைந்தது.

அதன் பிறகு நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் குழாயை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடிநீரின்றி பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் விருத்தாசலம்– ஜெயங்கொண்டம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், எங்களுக்கு விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

அதற்கு போலீசார், இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் விருத்தாசலம்– ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்