ஆண்டிப்பட்டியில் வீடுகளில் நகைகளை திருடிய வாலிபர் கைது - 40 பவுன் பறிமுதல்

ஆண்டிப்பட்டியில் வீடுகளில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-23 23:00 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 42). இவர் ஆண்டிப்பட்டி நகரில் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷீலாபிரியா விழுப்புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோகன் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் மற்றும் 560 கிராம் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கனி (44) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான்பாட்சா, துரைராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் வீட்டில் பதிவான தடயங்களை வைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி விலக்கில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள வி.குரும்பபட்டியை சேர்ந்த காளியப்பன் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் குன்னூர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 40 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காளியப்பனை ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்