விருத்தாசலம், நெய்வேலியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விருத்தாசலம், நெய்வேலியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2019-10-23 22:15 GMT
கடலூர், 

விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்த கார்த்தி என்ற கார்த்திகேயன்(வயது 30), அருணா ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், சிறையில் இருந்து ஜாமீனில் வந்த கார்த்திகேயன், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி விருத்தாசலம் மார்க்கெட்டில் நின்ற சிவக்குமாரின் மனைவி ரத்னாவை, எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ரத்னா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இவரது குற்றச்செயலை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறைக்காவலர்கள் மூலம் கார்த்திகேயனிடம் போலீசார் வழங்கினர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அருணா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோல் நெய்வேலியில் வழிப்பறி கொள்ளையன் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதன் விவரம் வருமாறு:-

நெய்வேலி டவுன்ஷிப் எம்.ஆர்.கே சாலையில் உள்ள மளிகை கடை வழியாக தேவராஜ் மகன் செல்வகுமார் (30) என்பவர் கடந்த மாதம்(செப்டம்பர்) 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நெய்வேலி ஏ.1 மாற்று குடியிருப்பை சேர்ந்த செல்லதுரை மகன் கட்டையன் என்கிற தர்மசீலன் (26) என்பவர் செல்வகுமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தார்.

இது பற்றிய புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டையன் என்கிற தர்மசீலனை கைது செய்தனர். அதன்பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் அடி-தடி, கொலை முயற்சி வழக்குகள் 7 உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் தர்மசீலனை கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்