சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய வழக்கு: தம்பி உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை

சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய வழக்கில் தம்பி உள்பட 3 பேருக்கு கீரனூர் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2019-10-23 22:15 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள வெப்பாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து. விவசாயியான இவரது குடும்பத்திற்கும், இவரது தம்பி சேசுராஜ் குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது சேசுராஜ் மற்றும் அவரது மனைவி லூர்துமேரி, மகன் சவரிமுத்து ஆகியோர் சேர்ந்து சவரிமுத்துவை தாக்கினர். மேலும் சவரிமுத்துவின் காதை தம்பி மகன் சவரிமுத்து கடித்து துப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

3 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு கீரனூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் சேசுராஜ் மற்றும் அவரது மனைவி லூர்துமேரி, மகன் சவரிமுத்து ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிச்சைராஜன் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்