சிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜனதாவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி
சிவசேனா ஆதரவு இல்லாமல் மராட்டியத்தில் பா.ஜனதாவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.;
மும்பை,
சிவசேனா ஆதரவு இல்லாமல் மராட்டியத்தில் பா.ஜனதாவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
கருத்துக்கணிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த 21-ந் தேதி நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில், பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா மராட்டியத்தில் தனிப்பெரும்பான்மையை நெருங்கி வெற்றி பெறும் என ஒரு கருத்துக்கணிப்பு கூறியது.
அந்த கருத்துக்கணிப்பு ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களில் பா.ஜனதா 142 இடங்களிலும், சிவசேனா 102 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்து இருந்தது.
இது பா.ஜனதாவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனித்து ஆட்சி அமைக்க முடியாது
மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் சிவசேனா 100 இடங்களில் வெற்றி பெறும். நாங்கள் 4 முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பா.ஜனதாவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியில், பா.ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 இடங்களில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.