சம்பளம், போனஸ் கேட்டு போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பெண்கள்

தேவதானப்பட்டி அருகே சம்பளம், போனஸ் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்த வந்த தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-26 23:15 GMT
தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நிலுவை சம்பளம் மற்றும் போனஸ் கேட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து தகவல் அறிந்து வந்த பெரியகுளம் தாசில்தார் ரத்தினமாலா பெண் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தாசில்தார் போராட்டத்தை கைவிடுமாறு பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பெண்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தாசில்தாரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவரை போலீசார் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். மேலும் தொடர்ந்து பெண் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்