நெமிலி அருகே, அணுகுண்டு வெடி, வெடித்ததில் முகம் சிதறி மாணவன் பலி

நெமிலி அருகே அணுகுண்டு வெடிக்கு நெருப்பு வைத்து விட்டு நீண்டநேரமாகியும் வெடிக்காததால் அருகில் சென்று பார்த்தபோது திடீரென அந்த வெடி வெடித்ததில் மாணவன் முகம்சிதறி பலியானான்.

Update: 2019-10-29 23:15 GMT
பனப்பாக்கம், 

வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் செல்வராஜ் (வயது 10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் தீபாவளிக்கு அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அதேபோன்று மாணவன் செல்வராஜ் 28-ந் தேதி இரவு வீட்டுக்கு வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அப்போது அணுகுண்டு வெடி (ஆட்டோபாம்) ஒன்றை வெடிப்பதற்காக எடுத்துவந்தான். அதன் திரியில் தீ வைத்துவிட்டு தூரமாக சென்றான். ஆனால் அது வெடிக்கவில்லை.

சிறிதுநேரம் காத்திருந்த செல்வராஜ், வெடிக்காத அந்த வெடியின் அருகில் சென்று திரியில் நெருப்பு உள்ளதா குனிந்துபார்த்தான். இந்த நேரத்தில் அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் செல்வராஜ் முகம் சிதறியது. இதனால் அவன் அலறிதுடித்தான். இதைப்பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவனை மீட்டு நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு செல்வராஜை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தில் முகம் சிதறி மாணவன் பலியான சம்பவம் நெமிலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்