சித்ரதுர்காவில், மக்கள் ஆச்சரியம்: 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம் - உண்மை என்ன?

சித்ரதுர்காவில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவர் உயிருடன் வந்துள்ள நிகழ்வை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-10-29 23:43 GMT
பெங்களூரு,

சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே தாலுகாவில் உள்ள சித்ரநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சன்ன ஈரண்ணா என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அவரது உடலை குடும்பத்தினர் தங்களின் கிராமத்தில் புதைத்தனர். 3 நாட்களுக்கு பிறகு அங்கு போய் பார்க்கும்போது, குழி மீது மூடப்பட்டிருந்த மண் சிதறி கிடந்ததாகவும், அதை பற்றி தாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குடும்பத்தினர் கூறினர்.

இந்த நிலையில் சன்ன ஈரண்ணா (வயது72) ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்துள்ளார். அவரை சித்ரநாயக்கனஹள்ளி கிராமத்தினர் சிலர் அடையாளம் கண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ரதுர்காவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர் தனது மனைவி, மகன்களை பார்த்து அடையாளம் கண்டுள்ளார்.

இறந்து மண்ணில் புதைக்கப்பட்டவர் மீண்டும் வந்துள்ளாரே என்று குடும்பத்தினர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த சன்ன ஈரண்ணா ஆந்திராவில் அக்காள்-தங்கை என 2 பேரையும் திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. இறந்தவர் மீண்டும் வந்ததாக கூறப்படும் நபரை நம்ப முடியாமல் அக்கிராமத்தினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுபற்றி அந்த கிராம மக்கள் ஆர்வமாக விவாதித்து வருகிறார்கள். உண்மையிலேயே அவர் சன்ன ஈரண்ணா தானா? அல்லது அவரை போன்ற தோற்றம் உடையவரா?, இறந்தவர் எப்படி உயிருடன் எழுந்து வர முடியும்? என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த சந்தேகங்களுக்கு டி.என்.ஏ., அதாவது மரபணு பரிசோதனை மூலமே விடை கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சினிமாவில் கூட இறந்த ஒருவர் மீண்டும் உயிருடன் வந்ததாக காட்டப்படுவது இல்லை. ஆவி மூலம் வருவது போல் தான் காட்டுகிறார்கள். ஆனால் இங்கு நிஜமாகவே இறந்தவர் ஒருவர் உயிருடன் வந்துள்ளதாக கூறப்படும் தகவல் கிராம மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்