பக்கத்து வீட்டுக்காரர் ஆபாசமாக திட்டியதால், கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தேனியில் பக்கத்து வீட்டுக்காரர் ஆபாசமாக திட்டியதால் கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-30 22:15 GMT
தேனி,

தேனி தபால் நிலையம் ஓடைத்தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சதீஷ்குமார் (வயது32). கார் டிரைவர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது.

நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். கிருஷ்ணவேணி தனது வீட்டின் வாசலில் அமர்ந்து தலைவாரிக் கொண்டு இருந்தார். அப்போது அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரன் என்பவர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். கிருஷ்ணவேணி வாசலில் அமர்ந்து தலைவாரியதற்கு அவர் திட்டி, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆபாசமாக பேசியதை அவர் தட்டிக் கேட்டதால், அவரை சந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கிருஷ்ணவேணி நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அவருடைய கணவர் சதீஷ்குமார் வீட்டுக்கு வருவதற்குள், கிருஷ்ணவேணி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சந்திரன் ஆபாசமாக பேசி தாக்கியதால் அவமானப்பட்டு தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக சதீஷ்குமார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரன் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்