கும்பகோணத்தில் கால்நடைத்துறை சார்பில் 6 யானைகளுக்கு தடுப்பூசி

கும்பகோணத்தில் கால்நடைத்துறை சார்பில் 6 யானைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2019-10-30 22:15 GMT
கும்பகோணம்,

கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தலின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மழை காலத்தில் யானைகளை பாதிக்கும் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் தஞ்சாவூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேல், அம்மன்பேட்டை கால்நடை உதவி மருத்துவர் கமலநாதன், திருவையாறு கால்நடை மருத்துவர் பாஸ்கரன், கும்பகோணம் உதவி இயக்குனர் சையத்அலி ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் வந்து யானைகளை பரிசோதித்து தடுப்பூசி போட்டனர். அப்போது யானை பயிற்றுனர்கள் அசோக், ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

யானைகளுக்கு தடுப்பூசி

இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேல் கூறியதாவது:-

மழை காலம் வருவதையொட்டி யானைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக யானைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகள் ஆண்டுக்கு 1 முறை போடுவது வழக்கம். அதன்படி இன்று (அதாவது நேற்று) கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மங்களம் யானை, தனியாருக்கு சொந்தமான 2 யானைகள் உள்பட 6 யானைகளுக்கு தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் யானைகளுக்கு நோய் வராமல் பராமரிப்பது குறித்து யானை பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்