நாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-31 23:00 GMT
வலங்கைமான்,

வலங்கைமானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் காலை பிரார்த்தனை முடிந்து வகுப்புக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகம், படிக்கட்டுகள் மற்றும் வகுப்பறைக்குள் நாய்கள் அசுத்தம் செய்து இருப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்குள் புகும் நாய்கள் வகுப்பறைகளில் அசுத்தம் செய்கின்றன. இதனால் அருவருப்பாக உள்ளதால் மதிய உணவு உண்ண முடியவில்லை. இந்த நாய்கள் கடிப்பதற்காக விரட்டுவதால் மாணவிகள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் வகுப்பறையை விட்டு வெளியே வர மாணவிகள் அஞ்சுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் பேரூராட்சி துறை அலுவலர்கள், உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்