உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை: சண்முகாநதி அணை நிரம்பியது

உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தததில் சண்முகாநதி அணை நிரம்பியது.

Update: 2019-10-31 22:00 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் சண்முகாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மழை காரணமாக நேற்று முன்தினம் மாலை அணையின் முழு கொள்ளளவான 52.55 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணை தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 

அணைக்கு நீர்வரத்தாக 4 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வரும் தண்ணீர் முழுவதும் வரட்டாறு வழியாக திறந்துவிடப்படுகிறது. அந்த தண்ணீரானது முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

சண்முகாநதி அணையின் மூலம் ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, புத்தம்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களும் நிரம்புகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பெய்யும்போது சண்முகாநதி அணை 2 முறை நிரம்பியது. ஆனால் நீர்வரத்து கால்வாய் பகுதியில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்வரத்து குறைந்து அணை நிரம்புவதில் சில ஆண்டுகளாக சிக்கல் ஏற்படுகிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணை நிரம்பியுள்ளது. எனவே நீர்வரத்து கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்