திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நடந்தது.

Update: 2019-10-31 22:30 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ கழகம் டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது. அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக்கல்வியில் ஏற்கனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 7-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெறும் நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும். சென்னையில் உள்ள சங்க தலைமை நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆனால் அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். நன்னடத்தை சான்றிதழ் கிடையாது என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி தமிழக அரசு அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், போராட்டங்களை மேலும், தீவிரப்படுத்த வேண்டும். எனவே எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்