பாரதீய ஜனதாவுக்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது -நாராயணசாமி கருத்து

பாரதீய ஜனதாவுக்கு சரிவு காலம் தொடங்கிவிட்டதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-10-31 23:00 GMT
புதுச்சேரி, 

புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று இந்திராகாந்தியின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நேருவிடம் இந்திராகாந்தி அரசியல் கற்றார். தனது சிறுவயதிலேயே காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை வகித்தார். நேருவோடு வெளிநாடு சென்று வந்து வெளிநாட்டு கொள்கையை கற்றுக்கொண்டார்.வீடுகட்டும் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.

தீவிரவாதத்துக்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்தான் இரையாகி உள்ளனர். இதேபோல் மற்ற கட்சிகளில் யாராவது தியாகம் செய்தது உண்டா? பாரதீய ஜனதா இந்த நாட்டுக்காக என்ன செய்தது? மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. அதை இப்போது 4.5 சதவீதத்துக்கு தள்ளிவிட்டார்கள். இவர்களுக்கு நாட்டை வழிநடத்த திறமையில்லை. பொருளாதாரம் தெரியவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி, பண மதிப்பிழப்பு போன்றவற்றை கொண்டு வந்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆண்ட 60 ஆண்டு காலத்தில் வங்கிகளின் வாராக்கடன்களின் அளவு ரூ.4 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் இவர்களின் ஆட்சிக்காலத்தில் 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகளை பயன்படுத்தி சுரண்டி உள்ளனர். அதனால்தான் புத்திசாலிகளான தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு மரண அடி கொடுத்தனர். காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நானும், அமைச்சர் நமச்சிவாயமும் ஹெல்மெட் போடவில்லை என்று எங்கள் மீது வழக்குப்போட கவர்னர் சொல்கிறார். தேர்தல் விதிமுறைப்படி ஒருவர் முகத்தை மூடியபடியோ ஹெல்மெட் அணிந்தோ செல்லக்கூடாது. தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள்தான் அமலில் இருக்கும். அப்போது கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தேர்தல் நேரத்தில் மட்டும் ஆட்சி மாற்றம் என்பார். அவர்களுக்கு தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மரண அடி கொடுத்துள்ளோம். அவர் தொடர்ந்து ஆட்சிமாற்றம் என்று கூறிக்கொண்டேதான் இருப்பார்.

மராட்டியத்தில் பாரதீய ஜனதா வெற்றிபெற்று பல நாட்கள் ஆகியும் அவர்களால் இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. அங்கு 200 இடங்களை பெறுவோம் என்றவர்களுக்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது. பாரதீய ஜனதா மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது. மத்தியில் விரைவில் மாற்றம் வர உள்ளது.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்