ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு சம்பவம்: மகனை கொன்று, மத்திய அரசு ஊழியர் தற்கொலை முயற்சி

சென்னை ஆழ்வார்பேட்டையில் பெற்ற மகனை கொலை செய்துவிட்டு, ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-11-01 22:45 GMT
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை திருநேனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 82). இவர், சென்னை சாஸ்திரிபவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இவரது ஒரே மகன் வெங்கட்ராமன் (44). சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஸ்வநாதனின் மகன் வெங்கட்ராமன் உடல் அழுகிய நிலையில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்.

அருகில் விஸ்வநாதன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வெங்கட்ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விஸ்வநாதனின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது:-

எனக்கு வயதாகி விட்டது. எனக்கு பிறகு எனது மகனை கவனிக்க யாரும் இல்லை. இதனால் நான் எனது மகனுக்கு அதிக அளவில் தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு, நானும் இந்த முடிவை எடுக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

இவ்வாறு அவர் கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள விஸ்வநாதனின் உறவினர்களுக்கு இது குறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்