நீலகிரியில் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 85 இடங்களில் கட்டிடம் கட்டக்கூடாது மாவட்ட நிர்வாகம் உத்தரவு

நீலகிரியில் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 85 இடங்களில் கட்டிடம் கட்டக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-11-02 23:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாகவும், அதிக வனப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. இங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கட்டிடங்கள் கட்டுவதை வரன்முறைப்படுத்தவும் மாஸ்டர் பிளான் திட்டம் கடந்த 1993-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வனப்பகுதிகளில் கட்டிடம் கட்டக்கூடாது, நீர்நிலைகளில் இருந்து 150 மீட்டர் தொலைவில் கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் செங்குத்தான பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சிலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் போது, இயற்கை பேரிடர் ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 283 அபாயகரமான இடங்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரியில் அதிகளவில் அபாயகரமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் சில பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

85 இடங்களில்...

இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் சமயத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய, மழையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கும் போது உள்ளாட்சி மற்றும் சுரங்கம், கனிமத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடம் கட்டிடம் கட்ட தகுதி இல்லையென்றால் அனுமதி வழங்க பரிந்துரை செய்யக்கூடாது. பரிந்துரை செய்யப்படும் இடங்களில் மழை மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் பரிந்துரை வழங்கிய அலுவலரே முழு பொறுப்பாகி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, இதனை தவறாமல் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 17 இடங்களில் கட்டிடம் கட்ட பரிந்துரை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, எல்க்ஹில் காலனிகள், நொண்டிமேடு, தலையாட்டுமந்து, வேலிவியூ அண்ணா நகர், புதுமந்து, ராயல் கேசில், மேரீஸ்ஹில், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, அன்பு அண்ணா காலனி, வி.சி.காலனி, குருசடி காலனி, கிரண்டப் காலனி, ரிச்சிங் காலனி, காசா காலனி, மிஷனரி ஹில், கிரீன் பில்டு ஆகிய இடங்கள் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மொத்தம் 85 இடங்களில் கட்டிடம் கட்டக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்