‘மழையில் நனைந்தால் சிறந்த எதிர்காலம் உண்டு’ சரத்பவாரை சுட்டிக்காட்டி நிதின் கட்காரி நகைச்சுவை

மழையில் நனைந்தால் சிறந்த எதிர்காலம் உண்டு என்று சரத்பவாரை சுட்டிக்காட்டும் வகையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Update: 2019-11-02 23:00 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களை பெற்றது. இது கடந்த 2014-ல் நடந்த தேர்தலை விட 13 இடங்கள் அதிகமாகும். இதனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் சத்தாரா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் உதயன்ராஜே போஸ்லேவை தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்தார். தேசியவாத காங்கிரசை சேர்ந்தவரான உதயன்ராஜே போஸ்லே சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாரதீய ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல் மற்றும் சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு 79 வயதான சரத்பவாரின் சூறாவளி சுற்றுப்பயணம் மற்றும் சத்தாராவில் அவர் கொட்டும் மழையில் நனைந்து செய்த பிரசாரம் காரணமாக கூறப்படுகிறது. அவர் மழையில் நனைந்து பிரசாரம் செய்த காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

இந்தநிலையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று முன்தினம் மும்பை வில்லேபார்லேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நிருபர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது மழை பெய்ததால் 2 பேர் நிதின் கட்காரி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு குடை பிடித்தனர். உடனே நிதின் கட்காரி, “மழையில் நனைவதால் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. பத்திரிகையாளர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்” என்று தனக்கே உரித்தான பாணியில் கூறினார். சரத்பவாரை சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் பேசியது அங்கு இருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்