மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2019-11-02 23:17 GMT
தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 57 அடி ஆகும். இதன் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங் களில் உள்ள விவசாய நிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து பாசனத்துக்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதியன்று தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் பருவமழை பொய்த்துப்போனதால் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் பருவமழை கைக்கொடுக்கவில்லை. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தாமதமானது. இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகா, பெரியகுளம் மஞ்சளாறு வடிநீர் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்கள், சேகரன், கண்ணன் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர் கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நேற்று முதல் பழைய ஆயக்கட்டுக்கு 60 கனஅடி, புதிய ஆயக்கட்டுக்கு 40 கனஅடி தண்ணீர் என மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 148 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு குன்னுவாரங்கோட்டை பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 111 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணைக்கு வினாடிக்கு 276 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்