நீர்வரத்து குறைந்ததால், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

Update: 2019-11-03 22:00 GMT
உத்தமபாளையம், 

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த மழைக்கு ஏரிகள் நிரம்பி வெளியேறும் தண்ணீர் சுருளி அருவிக்கு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் நீர்வரத்து அதிகரித்து சுருளி அருவியில் கடந்த 31-ந்தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையவில்லை.

இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்