திண்டிவனம் அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

திண்டிவனம் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-11-03 22:15 GMT
திண்டிவனம், 

அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சூரியகுமார்(வயது 23). இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் இருசக்கரவாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சூரியகுமார் தன்னுடன் வேலைபார்க்கும் சிலம்பரசன்(23) என்பவருடன் விழுப்புரத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வந்தார். அதன்பிறகு நண்பரின் திருமணம் முடிந்ததும் சூரியகுமாரும், சிலம்பரசனும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சூரியகுமார் ஓட்டினார்.

திண்டிவனம் அடுத்த சாரம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சூரியகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிலம்பரசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்