ஆசிய நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கூடாது - முத்தரசன் வலியுறுத்தல்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கும் பஞ்சாலைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிய நாடுகளுக்கிடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

Update: 2019-11-03 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்த கம்யூனிஸ்டு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சி நீண்ட நெடுங்காலமாக போராட்டம் நடத்தி வந்தது. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஜீவா, ராமமூர்த்தி, கல்யாண சுந்தரம் போன்றோர் தமிழ் மாநிலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர்.

இதனை தொடர்ந்து 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி தமிழ் மாநிலம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ராமமூர்த்தி நாடாளுமன்ற மேலவையில் தமிழ்நாடு என்று பெயர் வைக்க சட்ட திருத்தம் செய்யவேண்டும் என மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா விவாதத்திற்கு வந்த போது அவர் சிறையில் இருந்ததால் அவரால் வலியுறுத்தி பேச முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுபெரும் கம்யூனிஸ்டு கட்சி தலைவரும், மாநிலங்களவை அமைச்சரவையில் இருந்து அவர் மரணம் அடையும் வரை உறுப்பினராக இருந்த பூபேஷ் குப்தா இதனை வலியுறுத்தி பேசினார்.

அப்போது மாநிலங்களவையில் இருந்த தி.மு.க. கழக தலைவர் அண்ணாவும், பூபேஷ் குப்தாவின் கருத்துடன் தான் உடன்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பெரியார், அண்ணா, ஜீவா போன்றவர்கள் வலியுறுத்தியும் அவர் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் தமிழ்நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் உயிர் நீத்தார். தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியதன் பேரில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசு தியாகி சங்கரலிங்கனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதோடு அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த விழாவில் கலந்துகொண்டு அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

தமிழக அரசு விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதன் மூலம் மத்திய-மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொள்கிறது. விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் விவசாயிகளை கொத்தடிமைகளாக மாற்றி விடுவர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படாத இந்த சட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தக்கூடாது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

பிரதமர் மோடி தற்போது தாய்லாந்தில் உள்ளார். அவர் அங்கு நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அங்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் இந்தியாவில் உள்ள 70 சதவீதம் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தடையில்லா வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்தக்கூடாது.

அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தமிழகத்திற்கு என தனிக்கொடி வேண்டும் என கூறியுள்ளார். இந்த கருத்து வரவேற்கத்தக்கது. தேசிய கொடியாக மூவர்ண கொடி உள் ளது. இதேபோன்று அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப மாநில கலாசாரத்தின் அடிப்படையில் கொடி அமைக்கலாம். இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். காஷ்மீர் மாநிலத்திற்கென தனிக்கொடி இருந்தது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது கண்டனத்துக்குறியது.

உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது அறிவிப்போடு நின்று விடாமல் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மதசார்பற்ற கூட்டணி கம்பீரமாக நின்று வெற்றி பெறுவது உறுதி.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு சிறந்த சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. அவர் அதற்கு தகுதியானவர்தான். ஆனால் சமீபகாலமாக விருதுகளும், பட்டங்களும் வழங்குவது சந்தேகத்திற்கு உட்பட்டதாக இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தை போல பலர் தகுதியானவர்கள் இருக்கிறார்கள். எனவே தகுதியானவர்களுக்கு பட்டங்களும், விருதுகளும் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். ரஜினிகாந்த் ஊழலற்ற ஆட்சி தருவார் என்று கருத்து பேசப்படுகிறது. முதலில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். அதன் பின்பு இதை பற்றி கருத்து சொல்லலாம். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

மேலும் செய்திகள்