நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 333 மனுக்கள் பெறப்பட்டன

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 333 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2019-11-04 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) ராஜன் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கிக்கடன், உதவித்தொகை உள்ளிட்ட 28 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவி தொகை உள்ளிட்ட 305 மனுக்கள் என மொத்தம் 333 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ரூ.51 ஆயிரம் காசோலை

கூட்டத்தில் தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த ராமதேவி என்பவரின் கணவர் ரவிச்சந்திரன் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது உயிரிழந்தார். இதையடுத்து பிரதமரின் குழந்தை உதவி திட்டத்தின் கீழ் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலையை ரவிச்சந்திரனின் மகள்களான அபிநயா, அட்சயா ஆகியோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் மானியமாக 12 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்தில் மின்னணு பணப்பரிமாற்ற ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்