சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2019-11-05 23:00 GMT
செங்குன்றம்,

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன.

இதில் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 233 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்தம் 10 மதகுகள் உள்ள நிலையில், அங்கு 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரிக்கு திறப்பு

தற்போது சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். தற்போது தண்ணீர் இருப்பு 932 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக அங்கு இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்