கவர்னர் கிரண்பெடி சர்வாதிகாரபோக்கு கொண்டவர் - நாராயணசாமி கடும் தாக்கு

கவர்னர் கிரண்பெடி சர்வாதிகாரபோக்கு கொண்டவர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-11-05 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திருவள்ளுவர் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். அவர்களை கண்டறிந்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உலக மறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் காவி உடையணிவித்து கொச்சைப்படுத்தி உள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு நானும், அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் காரைக்கால் சென்றிருந்தோம். அரசு மற்றும் தனியார், கோவில் நிர்வாகம் சார்பில் கலெக்டர் தலைமையில் 177 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. காவிரி நீர் வரும் வாய்க்கால்கள் 85 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது. இது ஒரு கூட்டு முயற்சி. அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின்பேரில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இந்த பணிகளை செய்துள்ளது. இதற்கு உதவியாக இருந்தவர்களை அழைத்து கவுரவித்து சான்றிதழ் வழங்கினோம்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி அதே தொண்டு நிறுவனங்களையும், தொழிற்சாலை அதிபர்களையும் அழைத்து விழா நடத்தி விருது வழங்கி உள்ளார். புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. கவர்னர் அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு செயலாளர்கள் முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுக்கு பணிந்து செயல்பட வேண்டும், கவர்னரின் உத்தரவின்படி செயல்படக் கூடாது என்றும் கூறியுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கலெக்டரை அழைத்து தெளிவாக கூறியுள்ளேன்.

விதிமுறைகளின்படி கவர்னருக்கு எந்த கோப்பின் மீது சந்தேகம் இருந்தாலும் அவர்கள் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பவேண்டும். புதுவை செயலாளர்கள் அது தொடர்பாக அமைச்சர் களின் அனுமதி பெற்றுத்தான் பதில் கடிதம் அனுப்பவேண்டும். அரசு செயலாளர்களை கவர்னர் நேரடியாக அழைத்து பேச அதிகாரம் கிடையாது. ஆனால் இதையெல்லாம் மீறி கவர்னர் தினமும் செயல்படுகிறார்.

இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில், போட்டி அரசு நடத்தும் வேலையை செய்ய முயற்சிக்கிறீர்கள். அது உங்களுக்கு ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அறிவுரைப்படிதான் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளேன்.

நீர்நிலைகளை தூர்வார உதவியவர்களுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் சான்றிதழ் கொடுத்த பின்னர் கவர்னர் எந்த அதிகாரத்தின்கீழ் அவர்களை மறுபடியும் அழைத்து விருது வழங்குகிறார்? கவர்னர் கிரண்பெடியின் மனப்போக்கு என்ன? என்பது எனக்கு தெரியும். அவருக்கு தினமும் தன்னைப்பற்றிய விளம்பரம் வரவேண்டும் என்பதுதான். அவர் விதிமுறைகளை மீறுகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். சர்வாதிகாரபோக்கு கொண்டவர்.

மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கலாம் என்று கோப்பு அனுப்பினால் அதை மத்திய அரசுக்கு அனுப்புகிறார். தற்போது எங்கள் முடிவுக்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது. பட்டானூர், பிப்டிக் நிலங்களை விற்பதையும், திட்டங்களையும் தடுத்து நிறுத்துகிறார்.

மத்திய அரசு புதுவை மாநிலத்தை புறக்கணித்த நிலையில் நாங்கள் வருமானத்தை பெருக்கி ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பெற்ற கடனுக்காக ரூ.300 கோடி வட்டியையும் ரூ.500 கோடி அசலையும் செலுத்த உள்ளோம். கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கினைப்பற்றி கவலைப்படாமல் மாநில அரசை குறைகூறுவதையே வேலையாக வைத்துள்ளார். சமூக வலைதளங்களை அரசுப்பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பெடி தினமும் அவற்றையே பயன்படுத்துகிறார். இவரைப்பற்றி மத்திய அரசிடம் பல முறை புகார் தெரிவித்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

மேலும் செய்திகள்