பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது

நடிகர் கமல்ஹாசனின் தந்தை வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. கமல்ஹாசன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.;

Update:2019-11-06 04:15 IST
பரமக்குடி,

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகும்.

பரமக்குடி அருகில் உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அவரது தந்தையும், விடுதலை போராட்ட வீரருமான வக்கீல் சீனிவாசனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) கமல்ஹாசனின் பிறந்த நாளாகும். இதையொட்டி நாளை காலை நடைபெறும் விழாவில் தனது தந்தையின் சிலையை கமல்ஹாசன் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அங்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்பு மையத்தையும் திறக்கிறார்.

படத்திறப்பு

இதனைத் தொடர்ந்து பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர், எமனேசுவரம் ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து அவரது தந்தை வக்கீலாக பணியாற்றிய பரமக்குடி கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் தந்தை சீனிவாசன் உருவ படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் தேவராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து தங்குகிறார்.

நாளை காலை மதுரையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பரமக்குடி சென்று விழாக்களில் பங்கேற்க உள்ளார்.

மேலும் செய்திகள்