பா.ஜனதாவுடன் கைகோர்க்க ஜனதா தளம்(எஸ்) ஆர்வம் காட்டுவது ஏன்? பரபரப்பு தகவல்கள்

கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இடைத்தேர்தலில் பா.ஜனதா தோற்றாலும் எடியூரப்பா அரசுக்கு சிக்கல் இருக்காது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-11-07 00:00 GMT
பெங்களூரு, 

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை பலம் இல்லாதபோதும், ஆட்சி அமைக்க அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த எடியூரப்பா உரிமை கோரினார். அதே நேரத்தில் மதசார்பற்ற கட்சிகளான 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் 38 தொகுதிகளை கைப்பற்றிய ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. மேலும் அக்கட்சிகள் கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரின.

ஆனால் கவர்னர், பா.ஜனதா ஆட்சி அமைக்க அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆட்சி பொறுப்பேற்ற 3-வது நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் என்று எடியூரப்பா அறிவித்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல், முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர்.

இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதனால் குமாரசாமி பதவி ஏற்பு விழா நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. குமாரசாமி பதவி ஏற்ற பிறகு, பல்வேறு சந்தர்ப்பங் களில் அவர் நடந்துகொண்ட விதம் அதாவது கண்ணீர் விட்டு அழுதது, காங்கிரசார் தொல்லை கொடுப்பதாக பேசியது போன்றவற்றால் ஆட்சியில் சிக்கல் இருப்பதை வெளிப்படுத்தினார்.

ஆனாலும், 14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி செய்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் ஒன்றாக கூட்டணி அமைத்து சந்தித்து, வரலாறு காணாத தோல்வியை சந்தித்தன. காங்கிரஸ் தோல்விக்கு ஜனதா தளம்(எஸ்) காரணம் என்று காங்கிரசாரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தோல்விக்கு காங்கிரசார் தான் காரணம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.

நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகம் அடைந்த பா.ஜனதாவினர், கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை திட்டத்தை மிக மிக ரகசியமாக வகுத்து அமல்படுத்தினர். அதன்படி அக்கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்களை மும்பையில் தங்க வைத்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து தானாகவே கவிழ்ந்தது. அதன் பிறகு நீண்ட இழுபறிக்கு பிறகு 76 வயதாகும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

எடியூரப்பா பதவி ஏற்ற பிறகு, குமாரசாமி மீதான தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது குமாரசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு சித்தராமையா தான் காரணம் என்று தேவேகவுடா மற்றும் குமாரசாமி பகிரங்கமாக கூறி வருகிறார்கள். இதனால் சித்தராமையாவுக்கும், தேவேகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோருக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, எடியூரப்பாவின் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்தை பெற முடியும். இல்லாவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும். ஆபரேஷன் தாமரையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் பொதுமக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் பெரும்பான்மை பலத்தை பெறும் அளவுக்கு வெற்றி பெற முடியுமா? என்ற அச்சத்தில் பா.ஜனதா உள்ளது. இதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எடியூரப்பா அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதில் எடியூரப்பா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வருகிற 11-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

இதற்கிடையே தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பை பொறுத்தே இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்பது தெளிவாகும். சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்தால், 17 பேரும் எம்.எல்.ஏ.க்களாக தொடருவார்கள். தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று அறிவித்தால், இடைத்தேர்தல் நடைபெறுவதில் சிக்கலும் இருக்காது.

ஒருவேளை இடைத்தேர்தல் நடைபெற்று, பெரும்பான்மை பலத்திற்கு தேவையான இடங்களை பா.ஜனதாவால் கைப்பற்ற முடியாவிட்டால், எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்படும். அவ்வாறான சூழ்நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பா.ஜனதா அரசுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் குமாரசாமி ஏற்கனவே மறைமுகமாக கூறிவிட்டனர்.

எடியூரப்பாவை தொலைபேசியில் அழைத்து பேசிய தேவேகவுடா, இடைத்தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், உங்களின் ஆட்சியை கவிழ விடமாட்டோம் என்று உறுதியளித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் இந்த முடிவில் சில காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு தேவையான இடங்கள் கிடைக்காத பட்சத்தில் எடியூரப்பா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அந்த சூழ்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த 6 மாதங்களில் மீண்டும் தேர்தல் வரும். அவ்வாறு சட்டசபை தேர்தல் வந்து, காங்கிரஸ் வெற்றி பெற்றால், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாகும் நிலை ஏற்படும். ஆனால் சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமருவதை தேவேகவுடாவும், குமாரசாமியும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதனால் சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை தடுக்கும் நோக்கத்தில், தனது ஆட்சியை கவிழ்த்திருந்தாலும் பரவாயில்லை, எடியூரப்பா அரசை காப்பாற்ற குமாரசாமி தயாராக இருக்கிறார். அதனால் அழைப்பு இல்லாமலேயே பா.ஜனதாவுடன் கைகோர்க்க ஜனதா தளம்(எஸ்) ஆர்வம் காட்டி வருகிறது. இரு கட்சிகளும் கொள்கையில் வேறுபட்டு இருந்தாலும் கர்நாடகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சேர்ந்து 20 மாதங்கள் ஆட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்