மனவளர்ச்சி குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2019-11-07 23:00 GMT
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி ஜக்கம்மாள்பட்டி காலனியை சேர்ந்தவர் சின்னவேலு. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 32). கூலித்தொழிலாளி.

இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி, மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்குள் தூக்கி வந்தார். பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அறிந்த சிறுமியின் தந்தை, இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்பசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் மூலம் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கருப்பசாமியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்