மாநில அளவிலான அறிவியல் நாடக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்

மாநில அளவிலான அறிவியல் நாடக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.

Update: 2019-11-07 22:30 GMT
விழுப்புரம்,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம் ராமகிரு‌‌ஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவியல் நாடக போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 320 மாணவ- மாணவிகளும், 32 வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். போட்டியின் நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள், அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை சமூகத்திற்கு பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் விதமாக 4 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழா விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

இதில் சிறந்த இயக்குனருக்கான முதல் பரிசை சேலம் மாணவி ஜெய‌ஷீபாவும், சிறந்த கதையாசிரியருக்கான முதல் பரிசை திருச்சி மாணவி சக்திபிரியாவும், சிறந்த நடிகருக்கான முதல் பரிசை நீலகிரி மாணவர் ராகவனும், சிறந்த நடிகைக்கான முதல் பரிசை திருச்சி மாணவி நிவேதாவும், சிறந்த அறிவியல் நாடகக்குழுவிற்கான முதல் பரிசை சேலம் மாவட்டம் ஏற்காடு மாண்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பெற்றனர்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிரு‌‌ஷ்ணப் பிரியா, நடராஜன், விஸ்வேசுவராய தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலர் கோபாலகிரு‌‌ஷ்ணா, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலாளர் செந்தில்குமார், ராமகிரு‌‌ஷ்ணா மி‌‌ஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி பரமசுகானந்தாஜி மகாராஜ், பள்ளி முதல்வர் பாட்சா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்