புத்தேரியில் சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புத்தேரியில் சாலையை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2019-11-10 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக புத்தேரி ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் குழிகள் மூடப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேலும் கவிமணிநகர், ஆட்டுப்பட்டி, இல்லத்தார் தெரு, சுப்பிரமணிநகர் போன்ற பகுதிகளில் கழிவுநீர் ஓடையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே நோய் பரவும் அபாயத்தை தடுக்க வலியுறுத்தியும், சாலையை உடனே சீரமைக்க கோரியும் 10–ந் தேதி (நேற்று) புத்தேரியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய முன்னாள் தலைவர் சகாயம் அறிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தை

அதன்படி புத்தேரி அரசு பள்ளிக்கூடம் முன் நேற்று சகாயம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்த முயன்றவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை இந்த மாத இறுதிக்குள் சீரமைத்து தருவதாக கூறினர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுபற்றி சகாயம் நிருபர்களிடம் கூறுகையில், “புத்தேரியில் தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பல முறை மனு அளித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே தான் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது சாலையை 30–ந் தேதிக்குள் சீரமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்பெற்று உள்ளோம். அதன்பிறகும் சாலை சீரமைக்கப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்“ என்றார்.

மேலும் செய்திகள்