கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, அரசு பஸ்களில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்களில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

Update: 2019-11-10 22:45 GMT
கம்பம்,

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. இதுதவிர அந்தியோதயா திட்ட பயனாளிகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அவ்வாறு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமீபகாலமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சில கும்பல்கள் ரேஷன் அரிசி வியாபாரிகளாக செயல்படுகின்றனர். அவர்கள் ரேஷன் கடைகளில் பயனாளிக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை, பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அந்த ரேஷன் அரிசியை அரவை மில்லில் தீட்டி, அவற்றை இருசக்கர வாகனங்கள், மினி வேன், லாரி மற்றும் அரசு பஸ்களில் கம்பம் மெட்டு, குமுளி வழியாக கேரளாவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே பறக்கும் படை, வட்ட வழங்கல் அலுவலர்கள், உள்ளூர் போலீசார், தனிப்பிரிவு போலீசார் என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்தும் நபர்களை அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 100 டன் அளவில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் கம்பம்மெட்டு, குமுளி, போடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் நிரந்தர சோதனை சாவடி அமைத்து, கடத்தல் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்