வேங்கடமங்கலத்தில் மாணவரை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவரை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-11-10 22:45 GMT
திருப்போரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் தாழம்பூரை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 19) பாலிடெக்னிக் மாணவர். கடந்த 5-ந் தேதி முகேஷ் கொளப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் விஜயால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியுடன் தலைமறைவான விஜயை தாழம்பூர் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் விஜய் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

விஜயை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தாழம்பூர் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி காயத்திரிதேவி விஜயை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட விஜயிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகேஷ் எதற்காக சுடப்பட்டார், விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது முகேசை சுட பயன்படுத்திய துப்பாக்கியை நல்லம்பாகத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அருகே உள்ள பாறை ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து விஜய் கூறிய இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில், முகேசை சுட பயன்படுத்திய துப்பாக்கி கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்த 4 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி ஒருவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

ரவுடி கும்பலில் சேர முகேசை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியதாகவும் போலீசாரிடம் விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்