சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்? ஆதித்ய தாக்கரே பேட்டி

ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்? என்பதற்கு ஆதித்ய தாக்கரே பதிலளித்தார்.

Update: 2019-11-11 22:30 GMT
மும்பை,

கவர்னர் அழைப்பு விடுத்ததைத்தொடர்ந்து நேற்று சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே, கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது, அவர்கள் 2 கட்சிகள் தங்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவாக இருப்பதாகவும், எனவே சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எனினும் அந்த 2 கட்சிகளின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்க சிவசேனாவால் முடியவில்லை.

இந்தநிலையில் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஆதித்ய தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தயாராக உள்ளதாக கவர்னரிடம் கூறினோம். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே அவர்களது ஆதரவு கடிதத்தை கொடுத்துவிட்டனர். மேலும் 2 கட்சிகள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எங்களுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் முடிவு எடுக்க அவர்கள் எங்களிடம் கூடுதல் அவகாசம் கேட்டனர். இதனால் தான் அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதத்தை பெற முடியவில்லை.

அவர்களின் ஆதரவு சில நாட்களில் எங்களுக்கு கிடைத்துவிடும் என்பதால் ஆதரவு கடிதத்தை அளிக்க கவர்னரிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டோம். ஆனால் கவர்னர் எங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தர முடியாது என கூறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்