தேனி காந்திநகர் மக்களின் போராட்டம் எதிரொலி: பாதாள சாக்கடை திட்டப் பணி தொடக்கம், கருப்புக்கொடிகளை அகற்றாததால் பரபரப்பு

தேனி காந்திநகரில் மக்களின் போராட்டம் எதிரொலியாக பாதாள சாக்கடை திட்டத்தில் அந்த பகுதியை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசாரை கண்டித்து கருப்புக்கொடிகளை அகற்றாததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2019-11-16 03:45 IST
தேனி,

தேனி அல்லிநகரம் நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக காந்திநகர் உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, தெருவிளக்கு வசதி, பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், அப்பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் கடந்த 13-ந்தேதி தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டத்தை மக்கள் தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் இந்த பகுதிக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறிவுச்செல்வம் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் வந்தனர். அவர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது மக்கள் தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அங்குள்ள தெரு விளக்குகளை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர், பாதாள சாக்கடை திட்டத்தில் காந்தி நகரில் விடுபட்ட தெருக்களை இணைக்கும் பணிக்காக குழிகள் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. மேலும், அங்குள்ள தெருக்களில் பேவர் பிளாக் கற்களை கொண்டு சாலை அமைக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பணிகள் தொடங்கிய நிலையிலும் மக்கள் கருப்புக்கொடிகளை அகற்ற மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது, ‘அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சியை கண்டித்தும், சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்தும் போராட்டத்தை தொடங்கினோம்.

நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதால் நகராட்சிக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ஆனால், சட்டவிரோத மதுவிற்பனை தொடர்வதால் போலீசாரை கண்டித்து போராட்டத்தை தொடர்கிறோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்