எஸ்.கோட்டையூர், குணப்பனேந்தல் ஊராட்சிகளில், புதிய கால்நடை மருந்தகம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஊராட்சிகளில் புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

Update: 2019-11-17 22:15 GMT
இளையான்குடி, 

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ெஜயலலிதா, விவசாயிகள் மற்றும் பெண்கள் கால்நடை வளா்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வந்தார். அந்த வகையில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல் போன்ற திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். மேலும், கால்நடைகளை சிறந்த முறையில் பராமாிக்க தேவையான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் கால்நடைகள் வளா்க்க தேவையான உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தேவைக்கேற்ப புதிய கால்நடை மருந்தகங்களும் உருவாக்க திட்டமிட்டதுடன் தற்போது முதல்-அமைச்சா் உத்தரவின்படி கால்நடை களுக்கான அம்மா அவசர சிகிச்சை வாகனம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஊராட்சிகளில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமாிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், துணை இயக்குனர் ராஜதிலகம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார், இளையான்குடி வட்டாட்சியர் ரமேஷ், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராஜா, பலராமன், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்