தமிழகத்தில், 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் - அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

தமிழகத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று மின்பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

Update: 2019-11-18 22:00 GMT
வேலூர், 

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையே மகளிருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலை வகித்தார். மின்பகிர்மான கழக வேலூர் மண்டல தலைமை பொறியாளர் நந்தகோபால் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள், ேகாப்பைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பகுதியில் எங்களுக்கும் வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்கு வாக்களித்தாலும் அவர்களுக்கு நன்மை செய்வது எங்களுடைய அரசின் கடமை ஆகும். கோரிக்ைக வைப்பது உங்களது கடமையாகும். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் நாங்கள் அதை செய்து கொடுப்போம். ஏனென்றால் நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பாதிக்கப்பட்டேன்.

நந்தகுமார் எம்.எல்.ஏ. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு இடம் அமைந்தால் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்கப்படும். மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கையை நாம் நிறைவேற்ற வேண்டும்.

தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு மின் ஊழியர்களின் பணி தான் முதல் காரணம். அவர்கள் 24 மணி ேநரமும் பணியாற்றுகின்றனர். மழை போன்ற பேரிடர் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் செல்வார்கள். அப்போது தான் மின் ஊழியர்கள் பணியாற்றுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். வர்தா புயலின் போது தூக்கமின்றி உழைத்தார்கள். தமிழகத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குடும்பத்தை மறந்து பணியாற்றினர். மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 500 துணை மின்நிலையங்கள் அமைத்துள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் தேவை ஏற்படும் இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்படவேண்டும். அதற்கு இடம் தேவைப்படுகிறது. இடம் அமைந்தால் இன்னும் பல துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

2025-ம் ஆண்டு வரை மின்தேவை அறிந்து மின்சார துறை செயல்பட்டு வருகிறது. அதன்படி 4 ஆண்டுகளுக்குள் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழக மின்சார துறை மூலம் உற்பத்தி செய்யப்படும். வருகிற மார்ச் மாதம் வடசென்னையில் 800 மெகாவாட் உற்பத்தி செய்யும் பணியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்வது போன்ற சில இடையூறு காரணங்களால் அதில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஜெயலலிதா விட்டுச்சென்ற மின்மிகை மாநிலம் என்ற பெருமையை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை கோவை அணியும், 2-ம் இடத்தை சென்னை அணியும், 3-ம் இடத்தை திருநெல்வேலி அணியும் பிடித்தனர். அவர்களுக்கு சாம்பியன் பட்ட கோப்பைகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சு.ரவி, லோகநாதன், ஏ.பி.நந்தகுமார், ஜி.சம்பத், வில்வநாதன், காத்தவராயன், ஆவின் தலைவர் வேலழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், புயல் காலங்களில் ேவலை செய்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற செய்தி தவறானது. 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு வருகிற 25-ந் தேதியில் இருந்து நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்