திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்க விரைவில் அனுமதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-11-20 23:15 GMT
விளாத்திகுளம்,

அ.தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலக்கு என்று டி.டி.வி.தினகரன் கூறுவது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய 2 பேரும் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றுகின்றனர். அதேபோன்று அவர்கள் 2 பேரும் அரசியலுக்கு வந்து இணைந்தால், அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அந்த கட்சி எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்றது?, அ.தி.மு.க. எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்றது? என்று மக்களுக்கு தெரியும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்ற கட்சி கிடையாது அ.தி.மு.க..

தனிப்பெரும் கட்சி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வேறு முடிவு எடுத்தாலும், அதனுடன் நடந்த இடைத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று 9 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தனர். பின்னர் நடந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனினும் பின்னர் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 60 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. எனவே, யார் இணைந்து போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.

நாடாளுமன்ற தேர்தல்

பா.ஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசலாம். அவர் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுவது பொருத்தமாக இருக்காது. வருகிற 2021-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கிடையாது.

கோவில்பட்டி அருகே கடலையூரில் ‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்க போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைப்பது குறித்து, துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் வரலாறு குறித்து ஆய்வு செய்து, ஆய்வறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாரபட்சமின்றி...

தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் ஆன்-லைன் மூலம் டிக்கெட் வழங்கும் முறையை விரைவில் அமல்படுத்த உள்ளோம். இதனை அமல்படுத்தும்போது திரைப்படத்துறை அனைத்து நிலைகளிலும் சீர்படுத்தப்படும். எந்த திரைப்படம் வெளியிடப்பட்டாலும், அதற்கு திரையரங்குகளை வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக அந்த கவுன்சிலுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அனைத்து திரையரங்குகளிலும் பாரபட்சம் இல்லாமல் திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். கிட்டத்தட்ட இப்போது அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

திரையரங்குகள் அதிகரிப்பு

மாநகராட்சி பகுதிகளில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு அந்த திட்டம் தேவை இல்லை, தங்களிடம் உள்ள ஒரு திரையரங்கை 2 அல்லது 3 திரையரங்குகளாக மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எனவே, அதற்குரிய அனுமதி விரைவில், அதாவது ஓரிரு நாட்களில் வழங்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில் தற்போது 977 திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அம்மா திரையரங்கம் அமைக்கும் தேவை இருக்காது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்