தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவன் சாவு

தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவன் திடீரென உயிரிழந்தான். அவனது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-20 23:15 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் சதீ‌‌ஷ்(வயது 17). இவன் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று காலை வழக்கம் போல் சதீ‌‌ஷ் பள்ளிக்கு சென்றான். அப்போது பள்ளியில் அவன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவன் மயங்கி விழுந்தது, குறித்து அவரது தந்தை சந்திரசேகருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது, மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மேலும் அவர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில், சதீசுக்கு உடல்நலம் பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில், அவன் திடீரென உயிரிழந்து உள்ளான். எனவே அவனது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், மருத்துவமனை அருகே விருத்தாசலம்-சேலம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாசில்தார் கவியரசு மற்றும் விருத்தாசலம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாணவன் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையேற்று கொண்ட மாணவனின் உறவினர்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்