கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-21 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்ததால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் மற்றும் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் சோனை கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர்.

வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு மூலம் துணை தாசில்தார் நியமிக்கப்பட்டதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்