செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களிடம் ரூ.17 லட்சம் நூதன மோசடி

சென்னையில் செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களின் பெயரில் கடன் வாங்கி ரூ.17 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் செல்போன் நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-21 22:29 GMT
சென்னை,

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் மெர்சிலின் ஜோசப் (வயது 45). இவர் மயிலாப்பூரில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.

இவர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தங்கள் செல்போன் விற்பனை நிறுவனத்தில் பாலபிரதாப், நவீன்பிரியன், பிரகாஷ், சாந்தகுமார், திருமுருகன், சரவணன், வாசுதேவன் உள்பட 8 பேர் வேலை செய்து வருகின்றனர்.

கடன் வாங்கி தருவதாக மோசடி

இவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் செல்போன், மடிக்கணினி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பி கடைக்கு அடிக்கடி வரும் 110 வாடிக்கையாளர்கள் கடன் வாங்க சம்மதித்துள்ளனர். அவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் மூலம் 110 பேர்களின் பெயர்களிலும் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர்.

ஆனால் அந்த கடன்தொகை யார்? பெயரில் வாங்கப்பட்டதோ, அவர்களுக்கு போய் சேரவில்லை. மேற்கண்ட 8 பேரும் சேர்ந்து ரூ.17 லட்சம் கடன் தொகையையும் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது

இந்த புகார் மனு மீது மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். புகார் கூறப்பட்ட 8 பேர்களில் சாந்தகுமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நூதன மோசடி சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்