மாவட்ட செய்திகள்
தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா: ‘‘எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்’’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

“எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்“ என்று தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
தென்காசி,

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். அரசின் கூடுதல் செயலாளர் அதுல்ய மி‌‌ஷ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, புதிய மாவட்டத்திற்கான கல்வெட்டை ரிமோட் மூலம் திறந்து வைத்தார். பின்னர் அவர் நடந்து முடிந்த பணிகளுக்கும், புதிய திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது, அவர் பேசியதாவது:-

தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. தென்காசி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறி உள்ளது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று எம்.ஜி.ஆர். படத்தில் பாடல் இடம் பெற்றது. அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. தென்காசி மாவட்டத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய 3 விதமான நிலங்கள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்காசி அமைந்து உள்ளது.

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆனால், சிலர் தேர்தலை நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள். எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தவறான தகவல்களை பரப்பி வருகிறார். உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதற்கு அ.தி.மு.க. முயற்சி செய்கிறது என்று கூறி வருகிறார். மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலை எதிர்ப்பது போல் எதிர்த்து தி.மு.க.வினர் பேசுகிறார்கள். மு.க.ஸ்டாலின் மேயராக வரவேண்டும் என்பதற்காக 2006-ம் ஆண்டு நேரடி தேர்தலை தி.மு.க.வினர் கொண்டு வந்தனர். அதை அவர்களே மாற்றினார்கள். உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மறைமுக தேர்தலை ஆதரித்து தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, அவர் கூறுகையில், மேயர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்கள் வேறு கட்சியாகவும் இருந்தால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று கூறினார். எனவே, மறைமுக தேர்தலை நடத்தப்போவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இப்போது, மறைமுக தேர்தலை அ.தி.மு.க. கொண்டு வந்தபோது அதை எதிர்க்கிறார். பல மாநிலங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதையும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தொடங்கினார். அவர் வழியில் வந்த இந்த அரசு தென்காசி மாவட்டத்தை புதிதாக உருவாக்கி உள்ளது. இந்த மாவட்டம் தமிழகத்தில் 33-வது மாவட்டம் ஆகும்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் தனி கோட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 30 பிர்காக்கள், 251 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 5 நகரசபைகள் இந்த மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ளது.

நான் வரும் வழியில் உள்ள குளங்களை பார்த்தேன். அந்த குளங்கள் நிரம்பி வழிகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனால் குளங்கள் நிரம்பி வழிகிறது. முதல் ஆண்டு ரூ.100 கோடியும், அடுத்த ஆண்டு ரூ.328 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். நீர்மேலாண்மை திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சேமித்து வைக்கிறோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அரசு கலைக்கல்லூரிகள், 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 49 சதவீதம் மாணவர்கள் கல்வி பெற்று வருகிறார்கள். தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து கொண்டே வருகிறது.

தி.மு.க.வினர் இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பை பெருக்கவில்லை என்று கூறுகிறார்கள். முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதுபோல் நாங்களும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். அதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ரூ.3 லட்சத்து 431 கோடி அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொழில் தொடங்கப்பட்டு வருகிறது.

சட்டசபையில் 110 விதியின் கீழ் மொத்தம் 453 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதில் 88 திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. 280 திட்டப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. 2 திட்டங்களுக்கு கோர்ட்டில் வழக்குகள் உள்ளன. மற்ற திட்டங்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல கிராமங்களில் மக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது. இது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் நடைபெறும் என்று அறிவித்தேன். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள், கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்கள் பெற்றனர். மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. இதை பொருத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த அரசு மத்திய அரசின் அடிமை அரசு என்று கூறுகிறார்கள். மாநில அரசும், மத்திய அரசும் இணக்கமாக இருந்தால்தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முடியும். அந்த வகையில் நாங்கள் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து உள்ளோம்.

குறிப்பாக தென் மாவட்ட மக்களின் மருத்துவ சேவைக்காக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், புதிதாக 3 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டு உள்ளோம். அதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தோம். அதன் பிறகு பல்வேறு திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்று இருக்கிறோம். ஆனால் மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை இல்லை. தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு சார்பில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மாணவர்களுக்கு லேப்-டாப், முத்துலட்சுமி மகப்பேறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதுபோல் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு ரூ.19 கோடியே 69 லட்சம் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் அவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா, பத்தமடை பாய் நினைவு பரிசாக வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, அன்பழகன், வளர்மதி, டாக்டர் விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், பாண்டியராஜன், மணியன், காமராஜ், உடுமலை ராதாகிரு‌‌ஷ்ணன், நிலோபர் கபில், வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா (மாநகர்), பிரபாகரன் (புறநகர்), விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், முகம்மது அபுபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.

தி.மு.க.வை மக்கள் ஏற்காததற்கு காரணம் என்ன?

குட்டிக்கதை கூறி எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதை வருமாறு:-

ஒரு ஊரில் முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருநபர் வந்து பாவமன்னிப்பு கேட்டார். நீ என்ன தவறு செய்தாய், நான் எதற்கு பாவமன்னிப்பு தர வேண்டும் என்று முனிவர் கேட்டார். அதற்கு அந்த நபர் பலரை அவதூறாக பேசிவிட்டேன். அவர்களிடம் இருந்து எனக்கு பாவமன்னிப்பு வேண்டும். நீங்கள் பாவமன்னிப்பு தந்தால் சரியாகிவிடும் என்று அந்த நபர் கூறினார்.

அதற்கு முனிவர் உன் வீட்டில் தலையணை இருக்கிறதா? என்று கேட்டார். திடீரென்று தலையணை பற்றி கேட்கிறார் என்று அந்த நபருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அந்த நபர் தனது வீட்டிற்கு சென்று தலையணை எடுத்து வந்தார். அதை பிரித்து எடுக்கும்படி முனிவர் கூறினார். அந்த நபர் தலையணையை பிரித்தார். அதில் இருந்த பஞ்சுகள் எல்லாம் பறந்தது. உடனே அந்த நபர் நீங்கள் சொன்னது போல் தலையணையை பிரித்து விட்டேன். எனக்கு பாவமன்னிப்பு தாருங்கள் என்று கூறினார். அதற்கு முனிவர் தலையணையை பிரித்தால் பாவமன்னிப்பு தருவேன் என்று கூறினேனா?. உடனடியாக பறக்கும் பஞ்சுகளை ஒருங்கிணைத்து கொண்டு வா? என்று முனிவர் கூறினார். ஆனால், அந்த நபரால் பஞ்சுகளை ஒருங்கிணைத்து கொண்டு வர முடியவில்லை. பாவமன்னிப்பும் பெற முடியவில்லை. அதுபோல் தான் தி.மு.க.வினர் உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதுபோல் இந்த ஆட்சி பற்றியும் அவதூறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதனால் தான் அவர்களுக்கு மக்கள் பாவமன்னிப்பு கொடுக்கவில்லை. உதாரணமாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் தோல்வி அடைந்தனர். இதன்மூலம் மக்கள் தி.மு.க.வை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.