தேனி பஸ் நிலையத்தில், நகராட்சி குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்ற வியாபாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தேனி பஸ் நிலையத்தில் உள்ள குளிர்பான கடையில் நகராட்சி குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்ற வியாபாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த கடைக்கு ‘சீல்’ வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-11-28 22:30 GMT
தேனி,

தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையத்தில், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் அதிகாரிகள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து நேற்று சோதனை நடத்தினர். அப்போது, திண்டுக்கல் பஸ்கள் நிற்கும் நடைமேடையில், அனுஸ்ரீ என்ற பெயரில் செயல்பட்டு வரும் குளிர்பானம் மற்றும் டீ, காபி விற்பனை செய்யும் கடையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டில்கள் மூடி, முறையாக ‘சீல்’ வைக்கப்படாமல் இருந்தது.

பின்னர் கடைக்குள் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடைக்குள் நகராட்சி குடிநீரை சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் பாட்டில்களை அடைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதற்காக அந்த கடையின் உள்பகுதியை சிறிய தொழிற்கூடம் போன்று பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு தண்ணீர் பாட்டில்கள் மூட்டை, மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 2,500 காலி பாட்டில்களையும், சுமார் 500 தண்ணீர் நிரப்பிய பாட்டில்களையும் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் நவநீதன், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், தேனியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் இவ்வாறு நகராட்சி குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலர்கள், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அபராத தொகையை வசூல் செய்தனர்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடையின் உரிமையாளருக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் நவநீதன் கூறுகையில், ‘நகராட்சி குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது குற்றமாகும். அதுவும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்துள்ளனர். இதற்கான காலி பாட்டில்களை மதுபான பார்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்துள்ளனர். தற்போது விளக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு ‘சீல்’ வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்