திருச்சியில் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

திருச்சியில் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி, செல்போன்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-11-30 23:15 GMT
திருச்சி,

இலங்கை தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது, சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை சேர்க்கும் முனைப்புடன் செயல்பட்டு வந்த நபர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்து அவர்களை கைது செய்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் திருச்சி இனாம்குளத்தூரில் சாகுல் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகரில் உள்ள டிப்ளமோ என்ஜினீயரான சர்புதீன் (வயது 29) வீட்டுக்கு கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. துணை சூப்பிரண்டு ஜார்ஜ் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சர்புதீன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். வீ்ட்டில் இருந்து அவருடைய குடும்பத்தினர் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மடிக்கணினி, பென்டிரைவ் பறிமுதல்

தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சார்பில் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கருத்து பதிவுகளுக்கு சர்புதீன் முகநூலில் ஆதரவு தெரிவித்து இருந்ததும், இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டதும் தெரியவந்தது. கடந்த ஒரு மாதமாக சர்புதீனின் முகநூல் பக்கம் மற்றும் அவரது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதன்அடிப்படையில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது வீட்டில் இருந்த சர்புதீனின் மைத்துனர் ஜாபரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜாபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துபாய் செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் திருச்சி-மதுரை தேசிய நெடு்ஞ்சாலையில் அளுந்தூர் அருகே சர்புதீன் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அவரிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 6 செல்போன்கள், பென்டிரைவ், மெமரிகார்டு, சிம்கார்டுகள், சி.டி. மற்றும் டி.வி.டி.க்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் மரம் வெட்டுவதற்கு வைத்து இருந்த கோடரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் விசாரணை

இதையடுத்து சர்புதீன், ஜாபர் ஆகியோரை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு சர்புதீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ், மெமரிகார்டு உள்பட அனைத்து ஆவணங்களையும் எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்து, தடயவியல் சோதனைக்குட்படுத்த உள்ளனர்.

திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்