தோவாளை அருகே மலையில் மனித எலும்புக்கூடு கொலையா? போலீசார் விசாரணை

தோவாளை அருகே மலையில் எலும்புக் கூடான நிலையில் ஆண் பிணம் கிடந்தது. கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-30 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

தோவாளையில் இருந்து செண்பகராமன்புதூர் செல்லும் கால்வாய் கரையோரம் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே மலை உள்ளது.

இந்த மலையில் நேற்று பாறையின் இடுக்கில் மனித எலும்புக்கூடு கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பட்டு வேட்டி, ரோஸ் முழுக்கை சட்டை அணிந்த நிலையில் எலும்புக்கூடு இருந்தது. இதனால் இறந்தவர் ஆணாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கொலையா?

மேலும் எலும்புக்கூடு கிடந்த இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் கிடந்தன. இதனால், மலை குன்றில் ஒன்று சேர்ந்து சிலர் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில மாதங்களாக பிணம் அங்கேயே கிடந்ததால், எலும்புக்கூடாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து ைகரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். மேலும் போலீசார் எலும்புக் கூடை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஊரில் யாரேனும் காணாமல் போய் இருக்கிறார்களா? மற்றும் போலீஸ் நிலையத்தில் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் ஆகியவற்றை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து தோவாளை கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலும்புக்கூடாக கிடந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மலை யில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் தோவாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்